டமாஸ்கஸ்,
சிரியாவில் ஒருபுறம் உள்நாட்டுப் போர் நடந்து கொண்டிருந்தாலும், இன்னொரு பக்கம் ஐ.எஸ். பயங்கரவாதிகளும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.
அங்கு ஈராக் எல்லையில் டெயிர் அல் ஜோர் நகரையொட்டிய பகுதிகளில் 4 ஆயிரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளனர். சிரிய ஜனநாயக படையினருடன் அமெரிக்க கூட்டுப்படைகள் இணைந்து ஐ.எஸ். பயங்கரவாதிகளை எதிர்த்து சண்டையிட்டு வந்தன. இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமையன்றும், சனிக்கிழமையன்றும் சிரிய ஜனநாயக படையினருக்கும், குர்து இன போராளிகளுக்கும் எதிராக ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர்.
ஐ.எஸ். பயங்கரவாதிகளின் இந்த தாக்குதலில் சிரிய ஜனநாயக படையினர், குர்து இன போராளிகள் என மொத்தம் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கிலாந்தை சேர்ந்த சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் இந்த தகவல்களை வெளியிட்டுள்ளது.