பெய்ரூட்,
சிரியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான இத்லிப் நகரம் கிளர்ச்சியாளர்களின் பிடியில் உள்ளது. அவர்களிடம் இருந்து இந்த நகரை மீட்க ரஷிய படைகளின் உதவியோடு சிரிய ராணுவப்படை கடுமையாக போராடி வருகிறது. அதே சமயம் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகளும், கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
அந்த நகரில் உள்ள தலாதீன் என்கிற இடத்தில் கிளர்ச்சியாளர்கள் அமைப்பு ஒன்றின் தலைமை அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த தலைமை அலுவலகத்துக்கு அருகே பயங்கரவாதிகள் வெடிகுண்டுகள் நிரப்பிய காரை ஓட்டி வந்து வெடிக்க செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின. இதில் கிளர்ச்சியாளர்களின் தலைமை அலுவலகமும், அதன் அருகில் உள்ள சில வீடுகளும் இடிந்து விழுந்து தரைமட்டமாகின. அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீக்கிரையாகின.
இந்த பயங்கர தாக்குதலில் அப்பாவி மக்கள் 7 பேர் உள்பட 23 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிர் இழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.