டெல்லி,
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடந்த மாதம் 26ம் தேதி முதல் மோதல் நிலவி வருகிறது. ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்யும் தலிபான்களில் கிளை அமைப்பான தெஹ்ரிக் இ தலிபான் அமைப்பு பாகிஸ்தானில் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவதாக பாகிஸ்தான் அரசு குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்த அமைப்புக்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு அளிப்பதாக கூறி அந்நாட்டின் மீது பாகிஸ்தான் கடந்த 26ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானும் அவ்வப்போது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையேயான மோதலால் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபுல், காந்தகார் ஆகிய நகரங்களில் பாகிஸ்தான் நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் வான்வழி தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் கூறுகையில், ஆப்கானிஸ்தான் மீது வான்வழி தாக்குதல் நடத்தி உயிரிழப்பை ஏற்படுத்திய பாகிஸ்தானுக்கு கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
ஆப்கானிஸ்தானின் இறையாண்மை மீது பாகிஸ்தான் நடத்திய மற்றொரு அத்துமீறல் இது. ஆப்கானிஸ்தானின்
இறையான்மை, பிராந்திய ஒருமைப்பாடு முழுமையாக மதிக்கப்படவேண்டும்’ என்றார்.