புதுடெல்லி,
சிரியாவில் அதிபர் பஷார் அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் நடத்தி வரும் நீண்டகால போரில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பல நகரங்கள் அழிந்து வருகின்றன. போரில் பாதிக்கப்பட்ட அந்நாட்டின் உணவு பாதுகாப்பு உள்ளிட்ட விசயங்களை வலுப்படுத்தும் நோக்கில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை இந்தியா வழங்கியுள்ளது.
இதன்படி, சிரியாவுக்கான இந்திய தூதர் ஹிப்சூர் ரஹ்மான் அந்நாட்டின் உள்ளூர் நிர்வாக மந்திரி உசைன் மக்லப்பிடம் முதற்கட்டத்தில் ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை வழங்கினார்.
வருகிற 18ந்தேதிக்குள் மீதமுள்ள ஆயிரம் மெட்ரிக் டன் அரிசியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவசரகால மனிதநேய உதவிக்கான சிரிய அரசின் வேண்டுகோளுக்கு ஏற்ப இந்தியா அரிசி வினியோகம் செய்ய முன்வந்துள்ளது.
இரு நாடுகளும் நெருங்கிய மற்றும் நட்புரீதியிலான வரலாற்று உறவுகளை கொண்டுள்ளது என்று மத்திய வெளிவிவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.