வாஷிங்டன்,
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய பொருட்கள் மீதான வரியை 50 சதவீதம் உயர்த்தினார்.இதற்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்தியா-அமெரிக்கா இடையே வர்த்தக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா கணிசமாக குறைத்து விட்டதாக டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மாடுரோ, அவரது மனைவியை போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் அமெரிக்கா கைது செய்த நிலையில், அந்நாட்டின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா நிர்வகிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.இதில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துள்ள இந்தியாவுக்கு வெனிசுலா நாட்டு கச்சா எண்ணெய்யை வழங்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்தது.இந்த நிலையில் வெனிசுலாவின் கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். தலைநகர் வாஷிங்டனில் இருந்து புளோரிடாவுக்கு டிரம்ப், ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் சென்றபோது நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"வெனிசுலாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா வாங்க உள்ளது. அவர்கள் ஈரானிடம் இருந்து வாங்குவதற்குப் பதிலாக வெனிசுலாவிடம் இருந்து எண்ணெய் வாங்கப் போகிறார்கள். நாங்கள் ஏற்கனவே ஒப்பந்தத்தின் கருத்தை உருவாக்கிவிட்டோம். சீனா எண்ணைக்கான ஒரு சிறந்த ஒப்பந்தத்தைச் செய்வதை நாங்கள் வரவேற்கிறோம்… நாங்கள் ஏற்கனவே ஒரு ஒப்பந்தம் செய்துள்ளோம்.வெனிசுலாவை இப்போது நான்தான் ஆட்சி செய்கிறேன். இடைக்கால அதிபரான டெல்சி ரோட் ரிக்ஸ், நான் விரும்புவதை எல்லாம் செய்யும் வரை அவர் அந்த பதவியில் இருக்க அனுமதித்துள்ளேன்." இந்தியாவின் முக்கிய கச்சா எண்ணெய் ஆதாரங்களில் ஒன்று ஈரான் இருந்தது. ஆனால் ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்ததையடுத்து, இந்தியா ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை பெருமளவில் குறைத்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.