உலக செய்திகள்

‘ரஷிய எண்ணெய் வாங்குவதை இந்தியா நிறுத்தும்’ - மீண்டும் சொல்கிறது அமெரிக்கா

வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா உறுதிபூண்டுள்ளது என அமெரிக்கா கூறியுள்ளது.

வாஷிங்டன்,

இந்தியா–அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்திய பொருட்கள் மீதான வரியை 18 சதவீதமாக குறைப்பதாக தெரிவித்தார். மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும் என்றும் தெரிவித்தார். இதே கருத்தை வெள்ளை மாளிகையும் தெரிவித்தது.

ஆனால் தங்களிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்துவதாக இந்தியாவிடம் இருந்து தகவல் வரவில்லை என்று ரஷியா தெரிவித்தது. இந்த நிலையில் வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“அதிபர் டிரம்ப் இந்தியாவுடன் மற்றொரு சிறந்த வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார். அவர் பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசினார். அவர்கள் இருவரும் மிக நல்ல உறவை பகிர்ந்து கொள்கிறார்கள். ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணை வாங்குவதை இந்தியா நிறுத்தும். அதுமட்டுமல்லாமல், அமெரிக்காவிடமிருந்து எண்ணெய்யை வாங்கும்.

மேலும் வெனிசுலாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா உறுதிபூண்டுள்ளது. இது அமெரிக்காவிற்கும் அமெரிக்க மக்களுக்கும் நேரடி பலனைத் தரும். போக்குவரத்து, எரிசக்தி மற்றும் விவசாயப் பொருட்கள் உள்பட, அமெரிக்காவில் 500 பில்லியன் டாலர் அளவிலான முதலீடுகளைச் செய்வதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். இது மற்றொரு சிறந்த வர்த்தக ஒப்பந்தமாகும்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.