வாஷிங்டன்,
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள பரீமாண்ட் நகரில் வசித்து வந்தவர் சையத் வசீம் அலி (வயது 26). இந்தியரான இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஆவார். இவர் அங்குள்ள தனியார் வாடகை கார் நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை சையத் வசீம் அலி, தனது காரில் 3 பயணிகளை ஏற்றிக்கொண்டு சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள பால்அவென்யூ என்ற இடத்துக்கு அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது போக்குவரத்து சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்த மற்றொரு கார், அவரது காரின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் சையத் வசீம் அலியும், பயணிகளில் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த மற்ற 2 பயணிகளும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர்.
முன்னதாக, விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர், காரை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, விபத்தில் உயிர் இழந்த சையத் வசீம் அலியின் உடலை இந்தியா கொண்டுவருவதற்காக அவரது குடும்பத்தினர் கோ பண்ட் மீ என்ற வலைதளம் மூலம் நிதி திரட்டி வருகின்றனர்.