வாஷிங்டன்,
ஜம்மு மற்றும் காஷ்மீரின் கத்துவா நகரில் 6 பேரால் சிறுமி கற்பழிக்கப்பட்டு பின் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு இருக்கிறாள். இதேபோன்று மற்றொரு சம்பவத்தில், உத்தர பிரதேசத்தில் உனாவ் நகரில் டீன் ஏஜ் சிறுமியை எம்.எல்.ஏ. ஒருவர் கற்பழித்து விட்டார் என குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், விசாரணைக்காக போலீசாரால் அழைத்து செல்லப்பட்ட டீன் ஏஜ் சிறுமியின் தந்தை சிறையில் உயிரிழந்து விட்டார். இதற்கு எம்.எல்.ஏ. பின்னணியில் செயல்பட்டார் என அந்த சிறுமி புகார் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இதனை கண்டித்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இந்திய தூதரகம் முன் உள்ள காந்தி சிலை முன் இந்திய அமெரிக்கர்கள் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் கொலையை வெறுக்கிறோம், குற்றத்தினை வெறுக்கிறோம். வேண்டாம், வேண்டாம் என அமைதியான முறையில் கோஷங்களை எழுப்பினர்.
இந்திய அரசாங்கம் ஒன்றுமறியாத குழந்தைகள் மற்றும் சிறுமிகளை இன அரசியலில் இருந்து காப்பதற்கு இன்னும் அதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி இந்திய அமெரிக்க முஸ்லிம் கவுன்சில் ஆனது இந்திய தூதரகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது.
இதேபோன்று கற்பழிப்பு மற்றும் சிறுமி கொடூர கொலையை கண்டித்து இந்திய அமெரிக்க கிறிஸ்தவ கூட்டமைப்புகளும், இந்து அமெரிக்க தொண்டு அமைப்பும் தனியாக அறிக்கை வெளியிட்டுள்ளது.