ஜகார்த்தா,
இந்தோனேசியாவில் கடந்த புதன்கிழமை அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். சேரம் தீவின் கிழக்கு பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 6.5 ரிக்டர் அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதனைத்தொடர்ந்து அந்நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மலுகு மாகாணத்தின் அம்போன் நகரில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கம் கடலுக்கு அடியில் 29 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இந்த நிலநடுக்கத்தில் குழந்தை உள்பட 20 பேர் பலியானதாக முதல்கட்ட தகவல் வெளியானது.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோர் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளதாகவும் 156 பேர் காயமடைந்துள்ளதாகவும் பேரிடர் மீட்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.