காபூல்,
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து, அங்கு தலீபான் பயங்கரவாதிகளுக்கும், அந்நாட்டு அரசுக்கும் இடையிலான போர் தீவிரமான நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தலீபான்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர்.
இதனை தொடர்ந்து 20 ஆண்டுகளுக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் மீண்டும் தலீபான்கள் வசமானது. தலீபான்கள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்ததும் அந்த நாட்டின் அதிபர் அஷ்ரப் கனி தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
அதன் பின்னர் கடந்த திங்கட்கிழமை தலைநகர் காபூலில் உள்ள அதிபர் மாளிகையை கைப்பற்றிய தலீபான்கள், தங்களது போர் முடிவுக்கு வந்ததாக அறிவித்தனர். அதன் பின்னர் ஆட்சி மாற்றம் தொடர்பாக முந்தைய அரசின் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்கினர்.
கடந்த காலத்தில் தலீபான்கள் ஆட்சியில் பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்டன. பெண்கள் கல்வி கற்கவும், வேலைக்குச் செல்லவும் அனுமதிக்கப்படவில்லை.
அதேபோல் பெண்கள் தங்களது உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் பர்தா அணிய வேண்டும், ஆண்கள் கட்டாயமாக தாடி வளர்க்க வேண்டும், சினிமா மற்றும் ஆடல் பாடல்களுக்கு தடை, சிறிய குற்றங்களுக்கும் பொது வெளியில் கொடூரமான தண்டனை போன்ற எண்ணற்ற கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்திருந்தனர்.
இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் உயிர் பிழைத்தால் போதும் என்று கூட்டம் கூட்டமாக நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். அதே சமயம் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும், இஸ்லாமிய சட்டத்துக்கு உட்பட்டு பெண்களுக்கு உரிமைகள் வழங்கப்படும். அவர்கள் தங்களின் புதிய அரசிலும் பங்கேற்கலாம் என்றும் தலீபான்கள் உறுதியளித்துள்ளனர்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் புதிய அரசை அமைக்கும் பணிகளை தலீபான்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். இதற்காக கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து தலீபான் அரசியல் தலைவர்கள் பலரும் காபூல் திரும்பியுள்ளனர். அவர்களில் நாடுகடத்தப்பட்ட தலைவர்கள் பலரும் அடங்குவர்.
இதனிடையே தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும், அந்த அமைப்பின் தற்போதைய துணைத் தலைவருமான முல்லா அப்துல் கனி பரதர் ஆப்கானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட இருக்கிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதையொட்டி அவரும் கத்தாரில் இருந்து தற்போது காபூல் திரும்பியுள்ளார்.
முல்லா அப்துல் கனி பரதர் உள்பட தலீபான் தலைவர்கள் அனைவரும் தற்போது தலீபான்களின் புனித நகரமாக கருதப்படும் காந்தஹாரில் முகாமிட்டு உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் உருஸ்கன் மாகாணத்தில் 1968-ம் ஆண்டு பிறந்தவர் முல்லா அப்துல் கனி பரதர். இவர் ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் ஆட்சிக்கு எதிராக ஆப்கான் முஜாகிதீன் அமைப்புடன் இணைந்து சண்டையிட்டவர்.
சோவியத் யூனியன் வெளியேற்றத்துக்கு பிறகு, 1994-ம் ஆண்டு முகமது ஒமருடன் இணைந்து தலீபான் இயக்கத்தை ஆரம்பித்தார். முந்தைய தலீபான் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் முக்கிய பொறுப்பு வகித்தார். 2001-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் வீழ்ச்சிக்கு பிறகு தலைமறைவாக இருந்த இவரை கடந்த 2010-ம் ஆண்டு பாகிஸ்தான் கைது செய்து சிறையில் அடைத்தது.
அதன் பின்னர் அமெரிக்க அரசின் கோரிக்கைக்கு இணங்க கடந்த 2018-ம் ஆண்டு இவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து அமெரிக்க அரசுடனான அமைதி பேச்சு வார்த்தையில் முதன்மை பங்கு வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.