ஜெனீவா,
கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் 3 ஆம் தேதி ஐ.நா. சபையில் ஊழல் தடுப்பு உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 9 ஆம் தேதி, சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி உங்கள் உரிமை, உங்கள் பங்கு, ஊழலுக்கு எதிராக குரல் கொடுங்கள் என்பது 2021-ம் ஆண்டுக்கான ஆண்டு சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் முக்கிய அம்சமாக கடைபிடிக்கப்படுகிறது.
ஊழலைக் கையாள்வதில் மாநிலங்கள், அரசு அதிகாரிகள், அரசு ஊழியர்கள், சட்ட அமலாக்க அதிகாரிகள், ஊடகப் பிரதிநிதிகள், தனியார் துறை, கல்வியாளர்கள், பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட அனைத்து தரப்பினரின் உரிமைகள் மற்றும் பொறுப்புகளை முன்னிலைப்படுத்துவதே சர்வதேச ஊழல் எதிர்ப்பு நோக்கமாக கருதப்படுகிறது.
அதே போல் ஒவ்வொரு ஆண்டும் ஊழல் புலனாய்வு குறியீடு என்ற அறிக்கை வெளியிடப்பட்டு எந்தெந்த நாடுகளில் ஊழல் அதிகரித்துள்ளது, எந்த நாடுகள் ஊழலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது என்பன உள்ளிட்ட தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த 15 ஆண்டுகளில் எந்த நாடும் ஊழலுக்கு எதிராக குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
நவம்பர் மாத கணக்கின்படி நடப்பாண்டில் லஞ்சம் அதிகம் உலவிடும் நாடுகளின் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் இருந்து 82-வது இடத்திற்கு சென்றுள்ளது. 2020 ஆம் ஆண்டில் லஞ்சம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 77-வது இடத்தில் இருந்தது.
மொத்தமாக 194 நாடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் வட கொரியா, துர்க்மெனிஸ்தான் வணிகத்தில் லஞ்சம் அதிகம் நடைபெறும் நாடுகளாக உள்ளன. அதே நேரம் டென்மார்க், நார்வே மற்றும் பின்லாந்து நாடுகளில் மிகக் குறைந்த அளவில் ஊழல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.