முனிச்,
காஷ்மீரில் புலவாமா மாவட்டத்தில் பாகிஸ்தான் ஆதரவு ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பினர் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் உயிரிழந்தது, இந்தியாவில் மிகுந்த துயரத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த தருணத்தில் ஜெர்மனியில் உள்ள முனிச் நகரில் 55-வது முனிச் பாதுகாப்பு மாநாடு கடந்த 15-ந் தேதி தொடங்கியது. நேற்று இந்த மாநாடு முடிந்தது.
இந்த மாநாட்டில் இந்தியாவின் தரப்பில் தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகர் பங்கஜ் சரண் கலந்து கொண்டு, காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் விவகாரத்தை எழுப்பி பேசினார்.
இந்த மாநாட்டில் நடந்த பல்வேறு அமர்வுகளில், இந்தியாவில் நடத்தப்படுகிற பயங்கரவாத தாக்குதல்களின் பின்னால் பாகிஸ்தான் இருப்பதை இந்திய பிரதிநிதி எடுத்துரைத்தார். அதை பல நாடுகளும் கவனத்துடன் கேட்டு, இந்தியாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தன.
இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்ட பங்கஜ் சரண், ஜெர்மனி, அமெரிக்கா, ரஷியா, ஆப்கானிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வங்காளதேசம், ஆர்மேனியா, மியான்மர், மங்கோலியா, ஓமன் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது இந்திய மண்ணில் பாகிஸ்தான் ஆதரவில் பயங்கரவாதிகள் நடத்தி வருகிற தாக்குதல்களுக்கு அனைத்து நாடுகளும் கண்டனம் தெரிவித்ததாகவும், இந்தியாவுக்கு தங்களது ஆதரவை தெரிவித்ததாகவும் முனிச்சில் இருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.