வாஷிங்டன்,
இந்தியாவில் நேற்று தீபாவளி பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பொதுமக்கள் அதிகாலையிலேயே புத்தாடைகளை அணிந்து, இனிப்பு, பலகார வகைகளை அக்கம்பக்கத்தினருடன் பகிர்ந்து, கோவில்களுக்குச் சென்று பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். மேலும் விதவிதமான பட்டாசுகளை வெடித்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகமாக தீபாவளியை கொண்டாடினர்.
இதனிடையே இந்திய மக்களுக்கு பல்வேறு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் தீபாவளி வாழ்த்து தெரிவித்தனர். அந்த வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், தீபாவளி பண்டிகையை கொண்டாடும் அமெரிக்கர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அமெரிக்க மக்களுக்கு இந்த பண்டிகை இருளின் மீதான ஒளியின் வெற்றியை நினைவுபடுத்துகிறது. தீமையை நன்மை அழித்துவிடும் என்ற அழியாத உண்மையை தீபாவளி பண்டிகை உணர்த்துகிறது. இந்த பண்டிகை அமெரிக்க மக்களுக்கு நம்பிக்கை, செழிப்பு மற்றும் அமைதியை கொண்டு வரட்டும் என்று தெரிவித்துள்ளார்.
அதே போல் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், எனது நண்பர் நரேந்திர மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எனது மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஒளியின் பண்டிகையான தீபாவளி, இந்திய நாட்டிற்கு நம்பிக்கை, அமைதி மற்றும் செழிப்பை கொண்டு வரட்டும். இந்தியாவும், இஸ்ரேலும் ஒற்றுமையாக நிற்கின்றன. நட்பு, பாதுகாப்பு, புத்தாக்கம் மற்றும் வளமான எதிர்காலம் ஆகியவற்றில் நான் ஒன்றுபட்டு நிற்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிரதமர் மார்க் கர்னி வெளியிட்ட பதிவில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கனடாவில் உள்ள மக்கள் விளக்குகளை ஏற்றி, இருளின் மீதான ஒளியின் வெற்றியை, தீமையின் மீதான நன்மையின் வெற்றியை கொண்டாடுகிறார்கள். அனைவருக்கும் மகிழ்ச்சியான தீபாவளி நல்வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார். இதே போல், இந்தியாவுக்கான ஐக்கிய அரபு அமீரகத்தின் தூதர் அப்துல்நாசர் அல்ஷாலி, இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரக செய்தி தொடர்பாளர் காய் நிர், அமெரிக்காவின் எப்.பி.ஐ. தலைவர் காஷ் பட்டேல் உள்ளிட்ட பலர் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.