பெய்ஜிங்,
சர்வதேச அளவில் நடைபெறும் குற்றங்களை விசாரிக்க இண்டர்போல் எனப்படும் சர்வதேச போலீஸ் அமைப்பு செயல்படுகிறது. இதன் தலைமையிடம் பிரான்ஸ் நாட்டின் லயோன் நகரில் உள்ளது. இதன் தலைவராக மெங் ஹாங்வே பதவி வகித்து வந்தார். லயோன் நகரில் வசித்து வந்த அவர் செப்டம்பர் மாதம் முதல் காணவில்லை. இதுதொடர்பாக அவரது மனைவி புகார் அளித்தார். இதனை இண்டர்போல் விசாரணை செய்து வந்தது. இந்தநிலையில் அவரை சீன அரசு தடுப்புக்காவலில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மெங்க் ஹாங்வே கடந்த மாதம் சீனா சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவரை சீன போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு தடுப்புக்காவலில் வைத்துள்ளனர். எதற்காக அவரிடம் விசாரணை நடைபெறுகிறது, எந்த இடத்தில் விசாரணை நடைபெறுகிறது என்ற எந்த விவரத்தையும் சீன அரசு வெளியிடவில்லை. மெங் ஹாங்வே சீனாவைச் சேர்ந்தவர். அந்நாட்டின் துணை அமைச்சராக ஏற்கெனவே பதவி வகித்தவர். இந்த நிலையில் தான் அவர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். சீனாவின் சட்ட விதிகளை மீறியதாக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், இண்டர்போல் தலைவர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்வதாக மெங் ஹாங்வே அறிவித்துள்ளார். இது தொடர்பாக இண்டர்போல் தலைமை அலுவலகத்திற்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். மெங் ஹாங்வேவின் ராஜினாமா ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ள இண்டர்போல், அவரது ராஜினாமா உடனடியாக அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. மேலும், தற்போது துணைத்தலைவராக உள்ள தென்கொரியாவைச்சேர்ந்த கிம் ஜாங் யாங், பொறுப்பு தலைவராக இருப்பார் எனவும், வரும் நவம்பரில் துபாயில் நடைபெறும் பொதுக்குழுவில் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படுவார் எனவும் தெரிவித்துள்ளது.