ஈரான் - அமெரிக்க போ தொடங்கி 5 வாரங்கள் முடிவடைந்துள்ளன. போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய போதிலும், நேற்றும் இருதரப்பும் மாறிமாறி தாக்குதலில் ஈடுபட்டன. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீதும், அதன் அருகே உள்ள பகுதிகள் மீதும் வான்வழி தாக்குதல் நடத்தின. ஈரான் கராஜ் நகரில் உள்ள பி1 என்ற பாலம் தகர்க்கப்பட்டது.
பாலத்தின் நடுப்பகுதி பிளவுபட்டதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதேசமயம், வளைகுடா நாடுகள் மீது ஈரான் தொடர்ந்து தாக்குதல் நடத்தியது. குறிப்பாக, குவைத்தில் உள்ள மினா அல்-அஹமதி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில், அந்த ஆலை தீப்பற்றி எரிந்தது. நல்லவேளையாக யாரும் காயம் அடையவில்லை. தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
குவைத்தில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் ஆலை மீது ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. அதில், ஆலையின் சில பாகங்களுக்கு சேதம் ஏற்பட்ட தாக குவைத் உறுதி செய்துள்ளது.குவைத்தின் 90 சதவீத குடிநீர், கடல்நீரை குடிநீராக்குவதன் மூலம்தான் கிடைக்கிறது. அதனால், மக்களின் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில், அந்த ஆலைகள் குறிவைத்து தாக்கப்படுகின்றன.
இதுபோல், பஹ்ரைனிலும் ஈரான் தாக்குதல் நடத்தியதால், அதுபற்றி எச்சரிக்க 'சைரன்' ஒலி ஒலித்தபடி இருந்தது. சவுதி அரேபியா மீதும் ஈரான் டிரோன் தாக்குதல் நடத்தியது. ஆனால் அந்த டிரோன்களை அழித்து விட்டதாக சவுதி அரேபியா தெரிவித்தது. இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது.