உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிரான போரில் “வரலாற்று வெற்றி” - ஈரான் அறிவிப்பு

வீரமிக்க எங்கள் பிள்ளைகள் எதிரியை வரலாற்று சிறப்புமிக்க கையறுநிலைக்கும், நிரந்தர தோல்விக்கும் உள்ளாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹ்ரான்,

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், அனைத்து கப்பல் போக்குவரத்துக்காக ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு காலக்கெடு விதித்தார். இது குறித்து டிரம்ப் வெளியிட்டிருந்த பதிவில், "இன்றிரவு முழு நாகரீகம் (ஈரான்) ஒன்று அழிய போகிறது. அது மீண்டும் திரும்ப கொண்டு வர முடியாத அளவுக்கு இருக்கும். அது நடக்க வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனால், அதற்கான சாத்தியம் உள்ளது” என்று எச்சரிக்கை விடுத்திருந்தார். இந்தக் காலக்கெடு இன்று அதிகாலை 5.30 மணியோடு நிறைவடைய இருந்தது. இந்த சூழலில், ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த சூழலில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ஈரான் மீதான "குண்டுவீச்சு மற்றும் தாக்குதல்" நடவடிக்கைகளை நிறுத்தி, இரண்டு வார இருதரப்பு போர் நிறுத்தம் செய்யப்பட்டதாக அறிவித்தார். இதனைச் செய்வதற்கான காரணம் என்னவென்றால், நாங்கள் ஏற்கெனவே ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஓர் உறுதியான ஒப்பந்தத்தை மேற்கொள்வதில் கிட்டத்தட்ட முன்னேறிவிட்டோம். மேலும், ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றுள்ளோம்” என்று டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அமெரிக்காவுக்கு எதிரான போரில் "வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை" பெற்றுள்ளதாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, போரின் மூலம் ஈரான் அடையவிருந்த ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டதாக உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூறியுள்ளது. மேலும் குற்றவாளியான அமெரிக்காவை தனது 10 அம்சத் திட்டத்தை ஏற்கும்படி கட்டாயப்படுத்தியதன் மூலம் ஈரான் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை அடைந்துள்ளது என்றும் ஹார்முஸ் ஜலசந்தியின் மீதான ஈரானின் கட்டுப்பாடு, செறிவூட்டல் உரிமைகள் மற்றும் அனைத்துத் தடைகளையும் நீக்குதல் ஆகியவற்றை அமெரிக்கா ஏற்றுக்கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்பு கவுன்சில் மேலும் கூறுகையில், “ஆக்கிரமிப்பை நிறுத்தவும், சேதங்களுக்கு இழப்பீடு வழங்கவும், பிராந்தியத்திலிருந்து தனது படைகளை திரும்ப பெறவும் அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது. ஒரு மாதத்திற்கும் மேலாக அமெரிக்கா போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால் நாங்கள் எங்கள் நாட்டின் நோக்கங்களுக்கு முன்னுரிமை அளித்து, காலக்கெடுவை மீண்டும் மீண்டும் நிராகரித்தோம்.

எதிரியின் வருத்தம் மற்றும் விரக்தி, மற்றும் நாட்டிற்கு நீண்டகால அச்சுறுத்தலை அகற்றுதல் உள்ளிட்ட நோக்கங்கள் நிறைவேறும் வரை போர் தொடரும் என்று ஆரம்பத்திலிருந்தே தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, நாற்பதாவது நாளான இன்று வரை போர் தொடர்கிறது. அமெரிக்க ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவை ஈரான் மீண்டும் மீண்டும் நிராகரித்துள்ளதுடன், எதிரியின் எந்தவிதமான காலக்கெடுவிற்கும் முக்கியத்துவம் அளிக்காது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்துகிறது.

போரின் ஏறக்குறைய அனைத்து நோக்கங்களும் நிறைவேற்றப்பட்டுவிட்டன என்ற நற்செய்தியை இப்போது மாபெரும் ஈரான் தேசத்திற்கு நாங்கள் அளிக்கிறோம். உங்கள் வீரமிக்க பிள்ளைகள் எதிரியை வரலாற்றுச் சிறப்புமிக்க கையறுநிலைக்கும் நிரந்தரத் தோல்விக்கும் உள்ளாக்கியுள்ளனர். இன்னும் போர் முடியவில்லை. வரிகளை நீக்குதல் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை அமெரிக்கா ஏற்றுக்கொண்டால் மட்டுமே போர் முடிவுக்கு வரும்” என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.