தெஹ்ரான்,
சீனாவின் வுகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் இன்று 80க்கும் கூடுதலான நாடுகளுக்கு பரவியுள்ளது. உலகளவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்து தென்கொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிக அளவில் உள்ளது. ஈரானின் தெஹ்ரான், குவாம், கிலான் மற்றும் எஸ்பஹான் ஆகியவை அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாக உள்ளன.
ஈரானில் நேற்று ஒரே நாளில் 21 பேர் பலியாகினர். 1,076 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 145 ஆகவும், பாதிப்பு எண்ணிக்கை 5,823 ஆகவும் இருந்தது. பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சந்தேக அடிப்படையில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர் என அந்நாட்டு சுகாதார அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி கியானவுஷ் ஜஹான்பூர் அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் 49 பேர் வைரஸ் பாதிப்பிற்கு பலியாகியுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 194 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோன்று ஐரோப்பிய நாடுகளுக்கு விமானங்கள் செல்வதற்கு ஈரான் ஏர் நிறுவனம் தற்காலிக தடை விதித்து உள்ளது.