தெஹ்ரான்,
ஈரான் நாட்டின் மீது கடந்த 2015-ம் ஆண்டு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதற்கான அணு ஆயுத ஒப்பந்தம் முடிவான பின் அந்நாடு அணு ஆயுதங்கள் பயன்படுத்துவது பரவலாக குறைந்தது. இதற்காக ஈரான் மீது அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவிலான நாடுகளால் விதிக்கப்பட்ட தடைகள் நீங்கின.எனினும், கண்டம் விட்டு கண்டம் செல்லும் ஏவுகணை திட்டம் அல்லது சிரியா மீது ஈரானின் மண்டல கொள்கைகள் ஆகியவற்றை பற்றி இந்த ஒப்பந்தத்தில் எதுவும் கூறப்படவில்லை.
இந்த நிலையில், இந்த ஒப்பந்தத்தில் மேற்கூறப்பட்ட விவரங்கள் இடம்பெறாத விசயங்களை சுட்டி காட்டி அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், ஈரானுடனான சர்வதேச அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறுகிறோம் என்று நேற்று டிரம்ப் அறிவித்துள்ளார். ஆனால், ஈரான் அணு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து செயல்படுத்தப் போவதாக பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி நாடுகள் கூறியுள்ளன. மேலும் தங்களது செயல்பாடுகளை தடுக்க வேண்டாம் எனவும் இந்நாடுகள் அமெரிக்காவைக் கேட்டுக்கொண்டுள்ளன.
இந்த நிலையில், அமெரிக்கா பின்வாங்கிய நிலையிலும் வர்த்தக உறவுகளை தொடர்வோம் என்று ஐரோப்பிய நாடுகள், தீர்க்கமான உத்தரவாதம் அளிக்காவிட்டால், அணு ஆயுத ஒப்பந்தத்தை முறித்துக்கொள்வோம் என்று ஈரான் மூத்த தலைவர் அயதோல்லா அலி கமேனயி தெரிவித்துள்ளார். ஈரான் தொலைக்காட்சியில் உரையாற்றிய போது மேற்கண்ட தகவலை கமேனயி தெரிவித்தார்.