தெஹ்ரான்
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியானார்கள். அது முதல் மேற்காசியாவில் பதற்ற நிலை ஏற்பட்டது. ஈரானும் பதிலுக்கு கடுமையாக தாக்குதல் நடத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, உலக நாடுகளுக்கு சரக்கு கப்பல் செல்ல கூடிய முக்கிய ஹார்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியது. மீறி செல்லும் கப்பல்கள் தாக்கப்படும் சூழல் காணப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக பல்வேறு நாடுகளிலும் அத்தியாவசிய உபயோகத்திற்கான எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவுடன் தொடர்புடைய எண்ணெய் கப்பல் ஒன்றை பெர்சிய வளைகுடா பகுதியில் வைத்து ஈரானின் டிரோன்கள் கடுமையாக தாக்கின. இதில் கப்பல் கொழுந்து விட்டு எரிகிறது.
இதேபோன்று ஹார்மூஸ் ஜலசந்தி அருகே பல கப்பல்கள் தாக்கப்பட்டு உள்ளன. இந்த பகுதி முழுவதும் எங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் உள்ளன என கூறிய ஈரான், அமெரிக்கா, இஸ்ரேல், ஐரோப்பிய கப்பல்களுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் சீன, ரஷிய கப்பல்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்று தெரிவித்து உள்ளது.
இதனை தொடர்ந்து ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் தாய்லாந்து நாட்டின் மயூரீ நாரீ கப்பல், மார்ஷல் தீவுகளுக்கான ஸ்டார் குவைனெத் கப்பல், ஜப்பானின் சரக்கு கப்பலான ஒன் மெஜஸ்டி ஆகியவையும் தாக்குதலில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதில் ஜப்பானின் சரக்கு கப்பல், ஹார்மூஸ் ஜலசந்தி பகுதியில் இருந்து 52 கடல் மைல்கள் தொலைவில் கடலில் நங்கூரம் போட்டு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
இதுதவிர மார்ஷல் தீவுகளுக்கான கொடியுடன் சென்ற விஷ்ணு மற்றும் மால்டா கொடியுடனான ஜெபைரோஸ் என்ற 2 கப்பல்களும் தாக்கப்பட்டன. இதனால், மொத்தம் 6 கப்பல்களை ஈரான் தாக்கியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதில், இரு கப்பல்கள் ஈராக்கில் இருந்து எரிபொருள் ஏற்றி வந்தவை ஆகும்.