வாஷிங்டன்,
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி போர் தொடுத்தன. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மற்றும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. அதன்பின் கடந்த ஏப்ரல் 8-ந்தேதி அமெரிக்கா-ஈரான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது. இதற்கிடையே, அமைதி பேச்சுவார்த்தையில் இரு நாடுகளுக்கும் இடையே இழுபறி நீடித்து வருகிறது.இந்த நிலையில், ஈரான் மீதான போருக்கு இதுவரை 29 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.2.76 லட்சம் கோடி) செலவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மந்திரி பீட் ஹெக்செத், பாராளுமன்ற குழு விசாரணையின்போது கூறியதாவது:-“ஈரானுடனான போரில் கடந்த 74 நாட்களில் அமெரிக்கா 29 பில்லியன் டாலரை செலவிட்டுள்ளது. உலகில் மிகவும் திறமையான ராணுவமாக தனது நிலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காக கூடுதல் நிதியாக குறைந்தது சுமார் 1.5 டிரில்லியன் டாலரை வழங்க வேண்டும்” என்றார்.
கடந்த 2 வாரங்களுக்கு முன்பு, அமெரிக்க ராணுவ தலைமையகமான பென்டகன், ஈரான் போருக்கான செலவு மதிப்பீட்டை 25 பில்லியன் டாலர் என்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.இதற்கிடையே, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது, “ஈரான் போர் குறித்து நான் பேசும்போது எனக்கு முக்கியமாக ஒரு விஷயம்தான் தோன்றும். அது, அவர்கள் அணு ஆயுதத்தை வைத்திருக்கக் கூடாது என்பதுதான். அமெரிக்க மக்களின் நிதிநிலையைப் பற்றி நான் சிந்திப்பதில்லை. வேறு யாரைப் பற்றியும் நான் சிந்திப்பதில்லை” என்றார்.