உலக செய்திகள்

“நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம்”.. அமெரிக்கா, இஸ்ரேலுக்கு ஈரான் மிரட்டல்

ஈரானின் மிக முக்கிய தீவு நகரமான கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

தெஹ்ரான்,

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரானும் வளைகுடா நாடுகளில் தாக்குதல் நடத்தி வருவதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. ஈரானின் புதிய தலைவர் மொஜ்தபா கமேனியின் உயிருக்கும் உத்தரவாதம் இல்லை என்று இஸ்ரேல் அறிவித்துள்ளதால், கோபம் அடைந்த ஈரான் நேற்று முதல் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவும் தனது பதிலடியை தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த சூழலில், ஈரானின் மிக முக்கிய தீவு நகரமான கார்க் தீவில் அமெரிக்கா சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கூறுகையில், ஈரானின் முக்கியமான இடமாக கருதப்படும் கார்க் தீவில் உள்ள அனைத்து ராணுவ இலக்குகளும் முழுமையாக அழிக்கப்பட்டுள்ளன. அந்த தீவில் உள்ள எண்ணெய் உள்கட்டமைப்புகளை அழிக்காமல் இருக்க நான் தீர்மானித்துள்ளேன், ஆனால், ஈரான் அல்லது வேறு யாரேனும் ஹார்மூஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் செல்வதற்கு இடையூறு ஏற்படுத்தினால், இந்த முடிவை உடனடியாக மறுபரிசீலனை செய்வேன். உலகம் இதுவரை பார்த்திராத அளவுக்கு சக்திவாய்ந்ததும் நவீன தொழில்நுட்பத்துடனும் கூடிய ஆயுதங்கள் எங்களிடம் உள்ளன. நாங்கள் தாக்க விரும்பும் எந்த இலக்கையும் பாதுகாக்கும் திறன் ஈரானிடம் இல்லை” என்று அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்காவுக்கு தொடர்புடைய அனைத்து எண்ணெய் மற்றும் எரிசக்தி கட்டமைப்புகளைத் தாக்கி அழித்து சாம்பல் மேடாக மாற்றுவோம் என்றும், நாங்கள் சிந்தும் ஒவ்வொரு துளி ரத்தத்திற்கும் பழி தீர்ப்போம் என்றும் ஈரான் பரபரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஈரான் நாட்டின் 90 சதவீத எண்ணெய் உற்பத்தி கார்க் தீவில் இருந்துதான் நடைபெறும் நிலையில், அங்கு அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளதால் தற்போது போர் தீவிரம் அடைந்துள்ளது.