உலக செய்திகள்

ஈரான் தலைவர் மரணம்; பாகிஸ்தானில் நடந்த போராட்டத்தில் 9 பேர் பலி

பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டக்காரர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கராச்சி

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் நாடானது, மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானை நேற்று கடுமையாக தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் வான் வழியே தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் பலியாகி உள்ளனர் என அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்த தாக்குதலை நிறுத்தும்படி இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் கூறி வருகின்றன. இந்நிலையில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டு உள்ளார். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளாது. இதனை தொடர்ந்து பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் முன் போராட்டக்காரர்கள் இன்று திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நடந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். பலர் காயம் அடைந்தனர்.