உலக செய்திகள்

இஸ்ரேல், சவுதி, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், கத்தார், குவைத் மீது ஈரான் தாக்குதல்... பற்றி எரியும் மத்திய கிழக்கு...!

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

தெஹ்ரான்,

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது. மேலும், அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இந்நிலையில், ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு சக்தி உள்கட்டமைப்புகள், ராணுவ தளங்கள் என பல்வேறு பகுதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மீதும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

அதன்படி, மத்திய கிழக்கில் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. ஏவுகணைகள், டிரோன்கள் மூலம் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஈரானின் ஏவுகணை , டிரோன்கள் மத்திய கிழக்கில் உள்ள சவுதி அரேபியா, குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன் , ஜோர்டான் போன்ற நாடுகளை தாக்கியுள்ளன. இந்த தாக்குதலில் உயிரிழப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.