உலக செய்திகள்

தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறுங்கள்; நாட்டு மக்களுக்கு ஈரான் அரசு உத்தரவு

ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது.

தெஹ்ரான்,

இஸ்ரேல், ஈரான் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. இஸ்ரேலையும், அமெரிக்காவையும் ஈரான் எதிரிகளாக கருதுகிறது. இந்த மோதல் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது.

இதனிடையே, ஈரான் அணு ஆயுதத்தை பெறுவது தங்கள் நாட்டின் இருப்புக்கு அச்சுறுத்தல் என இஸ்ரேல் கருதுகிறது. மேலும், அமெரிக்காவும் இதே நிலைப்பாட்டில் உள்ளது. அதேவேளை, ஈரானுடன் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈடுபட அமெரிக்கா முயற்சித்தது. இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதையடுத்து, ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா இன்று அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலை தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக மத்திய கிழக்கில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவ படைத்தளம் அமைந்துள்ள குவைத், பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியா, ஓமன், ஜோர்டான் ஆகிய நாடுகள் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த மோதலால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. அதேவேளை, ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில், தலைநகர் தெஹ்ரானை விட்டு வெளியேறும்படி அந்நாட்டு மக்களுக்கு ஈரான் பாதுகாப்பு கவுன்சில் உத்தரவு பிறப்பித்துள்ளது. தெஹ்ரானை விட்டு வெளியேறி நாட்டின் பிற பகுதிகளுக்கு செல்லும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் - இஸ்ரேல் மோதலால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

முன்னதாக ஈரானில் உச்சதலைவர் அயதுல்லா கமேனி தலைமையிலான அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை கமேனி தலைமையிலான அரசு கடுமையாக ஒடுக்கியது. இந்த போராட்டத்தில் 3 ஆயிரத்து 117 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அதேவேளை, இந்த போராட்டத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.