உலக செய்திகள்

ஈராக்கின் மொசூல் நகரில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் 5 போலீசார் பலி

ஈராக்கின் மேற்கு மொசூல் நகரப்பகுதியில், மத்திய போலீஸ் சோதனை சாவடி மீது ஐ.எஸ். பயங்கரவாதிகள் கடுமையான தாக்குதல் நடத்தினர்.

மொசூல்,

ஈராக்கில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் ஆதிக்கம் இன்னும் முடிந்த பாடில்லை. இந்த நிலையில் அங்கு மேற்கு மொசூல் நகரப்பகுதியில், அல் ரிபாயி மாவட்டத்தில் மத்திய போலீஸ் சோதனை சாவடி மீது நேற்று முன்தினம் 7 ஐ.எஸ். பயங்கரவாதிகள், ஆயுதங்களுடன் வந்து கடுமையான தாக்குதலில் ஈடுபட்டனர். எதிர்பாராத இந்த தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் போலீசார் திணறினர்.

எனினும் இரு தரப்புக்கும் இடையே நீண்ட நேரம் சண்டை நடந்தது. முடிவில், 5 போலீசார் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை நடத்தி விட்டு ஐ.எஸ். பயங்கரவாதிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்து விட்டனர். அதைத் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் அங்கு குவிக்கப்பட்டனர். பயங்கரவாதிகளை தேடும் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் அவர்கள் சிக்கவில்லை.

இதேபோன்றதொரு தாக்குதல், மொசூல் பழைய நகரத்தில் அல் ஜாஞ்சிலி என்ற இடத்தில் உள்ள போலீஸ் சோதனை சாவடியில் 2 வாரங்களுக்கு முன் நடந்ததும், அதில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 3 பேர் பலியானதும் நினைவுகூரத்தக்கது.