புளோரிடா,
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே ஏற்பட்டுள்ள போரால் உலக நாடுகள் திணறி உள்ளன. உக்ரைனில் வசிக்கும் பல்வேறு நாட்டு மக்களும் சொந்த நாடுகளுக்கு அலறியடித்து கொண்டு ஓடி வருகின்றனர். போரில் ரஷியாவை தனியாக உக்ரைன் சந்தித்து வருகிறது.
இந்த நிலையில், நேட்டோ படைகளை களமிறக்காதது, போரில் இருந்து ஒதுங்கி இருப்பது என அமெரிக்கா பின்வாங்கியது உலக நாடுகளிடையே பரபரப்பு பேச்சு ஏற்படுத்தி உள்ளது.
ஆனால், பைடனின் எதிரியான டிரம்ப், தனது பதவி காலத்தில் உக்ரைனுக்கு செய்த மறைமுக ஆயுத உதவியும் இதற்கு அடிப்படையாக அமைந்துள்ள சந்தேகம் எழுந்துள்ளது.
இதற்கு வலு சேர்க்கும் வகையில், உக்ரைன்-ரஷிய போர் ஏற்பட அமெரிக்கா செய்த மறைமுக ஆயுத உதவி அடிப்படை காரணியாக அமைந்தது பற்றி டிரம்ப் வெளிப்படையாக பேசியுள்ளார்.
இந்த போரில், உக்ரைன் அதிபரை தைரியமிக்க வீரர் என கூறியுள்ள டிரம்ப், ரஷ்ய அதிபர் புதினையும் புகழ்ந்து பேசியுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் புளோரிடாவின் ஆர்லேண்டோ பகுதியில் நடந்த கன்சர்வேடிவ் அரசியல் செயலாக்க மாநாட்டில் கலந்து கொண்டு நேற்று பேசினார். இதில், உக்ரைன் மற்றும் ரஷிய போர் பற்றி பேசிய டிரம்ப், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஒரு தைரியமிக்க வீரர். அவர் ஒற்றையாளாக போராடி கொண்டிருக்கிறார் என புகழ்ந்து கூறினார்.
எனினும், ரஷிய அதிபர் புதினையும் அவர் விட்டு கொடுக்காமல் பேசியுள்ளார். புதின் திறமையானவர் என்பதில் பிரச்னை இல்லை. உண்மையில் அவர் திறமையானவரே. விசயம் என்னவெனில் நம்முடைய தலைவர்கள் ஊமைகளாக உள்ளனர். அதனால், மனிதகுலம் மீது துன்புறுத்தலை தொடுக்க புதினை அனுமதித்து விட்டது.
பைடனை (அமெரிக்க அதிபர்) மத்தளம் போல் நினைத்து புதின் விளையாடி கொண்டிருக்கிறார். இது பார்ப்பதற்கு நன்றாக இல்லை என பேசியுள்ளார்.
தொடர்ந்து டிரம்ப் பேசும்போது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வாபஸ் பெற்றபோது, 13 அமெரிக்க வீரர்கள் காபூல் விமான நிலையத்தில் வைத்து கொல்லப்பட்டனர். படைகளின் பரிதாப வாபசை பார்த்த பின்பே புதின் தனது முடிவை எடுத்துள்ளார் என்று கூறியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் அதிபர் தேர்தல் நடந்தபோது, உக்ரைனுக்கு ஆயுத உதவிகளை வழங்கி, பைடனை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டார் என டிரம்ப் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் டிரம்புக்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவி நீக்க தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில், உக்ரைனுக்கு ஆயுத உதவி செய்த தனது செயலை நியாயப்படுத்தும் வகையிலும் டிரம்ப் பேசியுள்ளார். அவர் கூறும்போது, உக்ரைனுக்கு ஆயுதங்களையும், பிற ராணுவ உபகரணங்களுக்காக கோடிக்கணக்கிலான டாலர் நிதியுதவியையும் நான் வழங்கியது பற்றி ஒவ்வொருவரும் பேசி வருகின்றனர்.
ஒபாமா அரசு போர்வைகளை வழங்கியது. பைடன் அரசு நடக்கும்போது, உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளது. எனது கண்காணிப்பில், பிற நாடுகள் மீது ரஷியா படையெடுப்பில் ஈடுபடவில்லை. இதற்கான 21ம் நூற்றாண்டின் ஒரே தலைவர் நான். எங்களுடைய நிர்வாகத்தின் கீழ் இருக்கும்போது, அமெரிக்காவை ரஷியா மதித்தது என்று கூறியுள்ளார்.
நான் அதிபராக இருந்திருந்தால் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருக்காது என்று பெருமையுடன் டிரம்ப் பேசியுள்ளார். ஆனால் அவரது கூற்றுப்படி உலக வல்லரசுகளில் ஒன்றான ரஷியாவை தனியாக உக்ரைன் எதிர்கொள்வதற்கு தேவையான ஆயுதங்களை டிரம்ப் நிர்வாகத்திலேயே வழங்கி இருப்பது அவரது பேச்சிலேயே வெளிப்பட்டு உள்ளது.