உலக செய்திகள்

இஸ்ரேல்-ஈரான் மோதல்; ஐ. நா. பாதுகாப்பு கவுன்சில் அவசரகால கூட்டத்திற்கு ஏற்பாடு

அனைத்து உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

பாரீஸ்

அமெரிக்காவுடன் சேர்ந்து இஸ்ரேல் இன்று ஈரானை தாக்கியது. இதில் போர் ஜெட் விமானங்கள் தாக்குதல் நடத்தின. இதனால் நகரத்தின் சில பகுதிகளில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது.

தெற்கு ஈரானின் ஹர்மோஜ்கான் மாகாணத்தில் மினாப் நகரில் உள்ள பெண்கள் தொடக்கப்பள்ளியின் மீது இஸ்ரேல் இன்று நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன.

இந்த நிலையில், பிரான்ஸ் நாட்டு வெளியுறவு மந்திரி ஜீன்-நோயல் பேரட் வெளியிட்ட செய்தியில், பிரான்ஸ் விடுத்த வேண்டுகோளை ஏற்று, பாரீஸ் நேரத்தின்படி இரவு 10 மணிக்கு ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரகால கூட்டம் ஒன்று கூடி ஈரான் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமையை பற்றி பேச உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.

ஐ. நா. பாதுகாப்பு கவுன்சிலின் பொது செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் இன்று கூறும்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் ராணுவ தாக்குதல் அதற்கு ஈரானின் பதிலடி ஆகியவை கண்டனத்திற்கு உரியன என கூறினார். அனைத்து உறுப்பு நாடுகளும் சர்வதேச சட்டத்திற்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.