ஜெருசலேம்
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு எதிரான போரில், ஈரானுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு லெபனானில் இருந்து செயல்பட்டது. இஸ்ரேல் மீது தாக்குதலை தொடுத்தது. இதனால், பதிலடியாக லெபனானை இஸ்ரேல் தாக்கியது. இதில், லெபனான் நாட்டில் பொதுமக்கள் பலர் பலியானார்கள். உடனடியாக போர்நிறுத்த உடன்பாடு ஏற்படுத்த வேண்டும் என்று இஸ்ரேலிடம் லெபனான் கோரி வந்தது.
இந்த நிலையில், லெபனான் ஜனாதிபதி ஜோசப் ஆவன் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருடன் சிறந்த முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, பெரிய அளவில் தீர்வு ஒன்று ஏற்படுவதற்கான நடவடிக்கையாக, இரு தலைவர்களும் தற்காலிக ஒப்பந்தம் ஒன்றை ஏற்படுத்தி கொள்ள முடிவு செய்துள்ளனர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறினார்.
தீவிர ராஜதந்திர முயற்சிகளின் விளைவாக இது ஏற்பட்டு உள்ளது. அந்த பகுதியில் பதற்றம் தணிந்துள்ளது என்றும் இதன்படி, 10 நாள் போர்நிறுத்த உடன்பாடு ஏற்பட்டு உள்ளது என்றும் டிரம்ப் சமீபத்தில் கூறினார். இதனால், லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே 10 நாட்களுக்கு தற்காலிக போர்நிறுத்த உடன்பாடு அமலில் உள்ளது.
இந்த சூழலில், தெற்கு லெபனானில் இன்று காலை 2 இடங்களை குறி வைத்து இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்களில் ஈடுபட்டது. இதில் பல்வேறு கிராமங்களில் இயந்திர துப்பாக்கிகளை கொண்டும், எறிகுண்டுகளை கொண்டும் தாக்குதல் நடத்தினர்.
ஹிஸ்புல்லா போராளிகள் சிலர் மஞ்சள் கோட்டை அணுகினார்கள். அதனால், தாக்குதல் நடத்தப்பட்டது என பெய்ரூட் நகரை அடிப்படையாக கொண்ட செய்தியாளர் ஒருவர் கூறினார்.
இதேபோன்று, மஞ்சள் கோட்டின் தெற்கே சுரங்கத்திற்கான நுழைவு பகுதியை நெருங்க முயன்ற நபரை நோக்கி மற்றொரு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சுரங்க நுழைவு வாசல் சேதமடைந்தது. எனினும் இது, போர்நிறுத்த உடன்பாட்டை மீறும் செயல் ஆகாது என இஸ்ரேல் ராணுவ செய்தி தொடர்பாளர் கூறினார்.
எனினும், லெபனானுக்கு எதிரான போர்நிறுத்த உடன்பாட்டை மீறும் வகையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நயீம் காசிம் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டாக இன்று கூறியுள்ளார்.