டெல் அவிவ்
அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து, கடந்த மாத இறுதியில் ஈரானில் வான்வழியாக தாக்குதல் நடத்தியது. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈரானில் பலியானார்கள். இந்த தாக்குதல்களுக்கு பதிலடியாக ஈரானும், இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் அவற்றின் படை தளங்கள் அமைந்த வளைகுடா நாடுகளில் உள்ள பகுதிகளை தாக்கி வருகின்றன.
இந்நிலையில், மோதல் தொடங்கி 2 வாரங்கள் கடந்துள்ள சூழலில், ஈரானின் முக்கிய அதிகாரிகள் பலியாகி உள்ளனர். ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே, புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் மோதலின் தொடக்கத்தில் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில், இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி நேற்று கூறும்போது, ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியான அலி லரிஜானி நள்ளிரவில் நடத்தப்பட்ட தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார் என கூறினார். அவருக்கு வயது 67. ஈரானின் மறைந்த உச்ச தலைவர் காமேனி மற்றும் அவருடைய வாரிசான மொஜ்தபா காமேனி ஆகியோருக்கு நெருங்கிய கூட்டாளியாக செயல்பட்டவர் லரிஜானி.
இதேபோன்று, ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படையின் பசிஜ் துணை ராணுவத்திற்கு தலைமையேற்று, மூத்த ராணுவ தளபதியாக செயல்பட்டு வந்தவர் குலாம்ரெசா சுலைமானி. இவர், கூடாரத்தில் தங்கியிருந்தபோது, தாக்கி வீழ்த்தப்பட்டார். இதனை இஸ்ரேல் பாதுகாப்பு படை நேற்று தெரிவித்தது. பொதுவாக தலைமையகத்தில் இருக்கும்போது எளிதில், கண்டறிந்து விட கூடாது என்பதற்காக அவர் கூடாரத்தில் சென்று தங்கியுள்ளார்.
எனினும், இஸ்ரேல் அவரை தாக்கியுள்ளது. அவருடைய துணை தளபதியான சையது கரிஷியும் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், நேற்று நள்ளிரவு ஈரான் உளவு பிரிவு தலைவரான இஸ்மாயில் கதாயீப் என்பவரை படுகொலை செய்ய இஸ்ரேல் பாதுகாப்பு படைகள் முயற்சித்து உள்ளன.
இதுபற்றி ஜெருசலேம் போஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தியில், இஸ்மாயிலை கொலை செய்வதற்கான தாக்குதல் முயற்சி நடந்துள்ளது என சில ஈரானிய ஊடகங்களும் தெரிவித்து உள்ளன. எனினும், அவருடைய நிலைமை என்னவானது? என்ற தகவல் வெளிவரவில்லை. அந்த தாக்குதல் வெற்றியடைந்தபோதும், உறுதியான முடிவுகள் எதுவும் நிச்சயம் செய்யப்படவில்லை என தகவல் தெரிவிக்கின்றது.