காசா,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையேயான உறவு பல்லாண்டு காலமாக சிதைந்துள்ளது. மேற்கு கரையில் இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள கிழக்கு ஜெருசலேம், காசா உள்ளிட்ட பகுதிகளுடன் தங்கள் சுதந்திர அரசுக்கு ராஜ்யரீதியிலான அங்கீகாரத்தை பாலஸ்தீனம் நாடுகிறது.
ஆனால் பாலஸ்தீனத்தை ஒரு சுதந்திரமான, அரசியல் மற்றும் ராஜ்யரீதியிலான அமைப்பாக அங்கீகரிக்க இஸ்ரேல் மறுக்கிறது. அதுமட்டுமின்றி ஐ.நா. சபையின் எதிர்ப்பையும் மீறி அங்கு ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றங்களை உருவாக்குகிறது. இதனால் பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் மோதல் என்பது தொடர்கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு ஜெருசலேம் நகரில் சில்வான் மாவட்டத்தில் இஸ்ரேல் படையினருடன் ஏற்பட்ட மோதலில் 20 வயது பாலஸ்தீன வாலிபர் ஒருவர் கொல்லப்பட்டார். 10 பேர் படுகாயம் அடைந்தனர். மேற்கு கரை நகரான ஜெனின் நகரில் இஸ்ரேல் படையினருடனான தகராறில் மற்றொரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார். ஏசுபிரான் பிறந்த பெத்லகேம் நகரம் அருகே உள்ள ஹசன் நகரில் நடந்த ஒரு மோதலில் 17 வயதான பாலஸ்தீனியர் ஒருவர் கொல்லப்பட்டார்.
அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்களில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டது அந்த மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.