ஜெருசலேம்,
இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்துக்கும் இடையே எல்லை பிரச்சினை காரணமாக நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தில் சர்ச்சைக்குரிய காசா பகுதியில் ஹமாஸ் பயங்கரவாத இயக்கம் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அந்த இயக்கம் இஸ்ரேல் ராணுவத்தினர் மீது தொடர் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகிறது. அந்த இயக்க பயங்கரவாதிகளை அழிக்க இஸ்ரேல் ராணுவமும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேலின் தெற்கு பகுதியை குறிவைத்து 2 ராக்கெட் குண்டுகளை வீசி எறிந்தனர். எனினும் இஸ்ரேல் வான் பாதுகாப்பு படை அந்த ராக்கெட் குண்டுகளை வானில் நடுவழியில் இடைமறித்துத் தாக்கி அழித்தன. இது தவிர வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ராட்சத பலூன்களை ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் எல்லையில் பறக்கவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கு பதிலடி தரும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
ஹமாஸ் பயங்கரவாதிகளின் ஆயுதக் கிடங்குகள் பதுங்குகுழிகள் உள்ளிட்டவற்றின் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தின. இது தொடர்பாக இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இஸ்ரேலுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகளும் கடுமையானவை என்றும், இஸ்ரேலிய மக்களுக்கு தீங்கு விளைவிப்பவர்களுக்கு எதிராக இஸ்ரேலிய ராணுவம் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதலில் காசா பகுதியில் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் இல்லை.