ஜெருசலேம்,
இஸ்ரேல் நாட்டின் பிரதமராக இருப்பவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ (வயது 68). இவர் அங்கு 1996-1999 காலகட்டத்தில் முதலில் பிரதமராக இருந்தார். அதன்பின்னர் 2009-ம் ஆண்டு பிரதமர் ஆனவர், இன்று வரை தொடர்கிறார்.
அவர் மீது 2 ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன. அவற்றின் மீது அந்த நாட்டின் போலீசார் 14 மாத காலமாக விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையின் முடிவில், அவர் மீது 2 ஊழல் வழக்குகள் தொடர்வதற்கு போதுமான ஆதாரங்கள் இருப்பதாக தெரியவந்து உள்ளது.
குற்றச்சாட்டுகள் என்னென்ன?
முதல் குற்றச்சாட்டு, அங்கு வெளியாகிற பிரசித்தி பெற்ற எடியாட் அஹரோனாட் பத்திரிகையின் வெளியீட்டாளர் அர்னான் மோசசுடன் பெஞ்சமின் நேட்டன்யாஹூ ரகசிய உடன்பாடு செய்துகொண்டு, தனக்கு சாதகமாக செய்திகள் வருமாறு பார்த்துக்கொண்டார். அதற்கு பதிலாக எடியாட் பத்திரிகைக்கு போட்டியாக உள்ள பத்திரிகைக்கு கடிவாளம் போட்டு கட்டுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்தார்.
இரண்டாவது குற்றச்சாட்டு, பெஞ்சமின் நேட்டன்யாஹூ 10 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலத்தில் 3 லட்சம் டாலருக்கும் (சுமார் ரூ.1 கோடியே 95 லட்சம்) அதிகமான பரிசுகளை பெற்று உள்ளார். அதிலும் குறிப்பாக இஸ்ரேலின் பெரும் பணக்காரரும், ஹாலிவுட் பட அதிபருமான அர்னான் மில்சானிடம் இருந்து விலை உயர்ந்த பரிசுகளைப் பெற்றுக்கொண்டு, அதற்கு பதிலாக அவருக்கு நிதி அமைச்சகத்தின் தடையை மீறி வரிச்சலுகைகள் கிடைக்குமாறு முயற்சித்தார்.
அட்டார்னி ஜெனரல் கையில் முடிவு
இந்த குற்றச்சாட்டுகளின் பேரில்தான் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீது 2 ஊழல் வழக்குகள் போடும் நிலை உருவாகி உள்ளது.
அவருக்கு எதிராக கிடைத்து உள்ள ஆதாரங்களை அட்டார்னி ஜெனரலிடம் போலீசார் வழங்குவர். அவர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ மீது வழக்கு பதிந்து குற்றச்சாட்டு பதிவு செய்வதா என்பதை தீர்மானிப்பார்.
இதற்கு இடையே அவர் பிரதமர் பதவியை விட்டு விலக வேண்டும் என்று அழுத்தங்கள் வரும் என தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் உயர் பதவியில் உள்ளவர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டால் மட்டுமே, பதவி விலகினால் போதும் என்று இஸ்ரேல் சட்டம் சொல்கிறது.
பதவி விலக மறுப்பு
தன்மீது ஊழல் வழக்குகள் பதிவு செய்வதற்கு போலீசார் பரிந்துரை செய்துள்ள தகவல் வெளியாவதற்கு சற்று முன்னதாக பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ டெலிவிஷனில் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார். அப்போது அவர் பதவி விலகப்போவது இல்லை என அறிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், நம்முடைய எதிர்காலத்தை உறுதிசெய்கிற விதத்தில் இஸ்ரேலை தொடர்ந்து வழிநடத்திச் செல்லுகிற பெரும் கடமை எனக்கு உள்ளது என உணர்கிறேன். கடந்த கால கட்டங்களில் 15 விசாரணைகளை நான் சந்தித்து உள்ளேன். ஆனால் அவற்றின் முடிவில் எதுவும் நடந்து விடவில்லை. இப்போதும் எதுவும் நடந்துவிடாது என்று குறிப்பிட்டார்.