ஸ்டாக்ஹோம்,
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவரான கிரேட்டா தன்பெர்க்(வயது 17), பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். தனது சிறு வயதில் இருந்தே சமூக ஆர்வலராக வலம் வரும் கிரேட்டா தன்பெர்க், சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து சர்வதேச அளவிலான மாநாடுகளில் கலந்து கொண்டு பேசியுள்ளார்.
பொது மேடைகளிலும், மாநாடுகளிலும் தனது கருத்துக்களை மிகவும் வெளிப்படையாக பேசுபவராக கிரேட்டா தன்பெர்க் அறியப்படுகிறார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து உலக தலைவர்கள் அக்கறை இன்றி செயல்பட்டு வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி வரும் இவர், தனது சமூக வலைதள பக்கங்கள் மூலம் உலகின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் சுற்றுச்சூழல் சீர்கேடு நிகழ்வுகள் குறித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் நடைபெற இருக்கும் நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என கிரேட்டா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கொரோனா தொற்று காலத்தில் இந்திய மாணவர்கள் தேசியத் தேர்வுகளில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுவது மிகவும் நியாயமற்றது.
அதே நேரத்தில் லட்சக்கணக்கான கடுமையான வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்திய மாணவர்களோடு நான் நிற்கிறேன். நீட், ஜே.இ.இ. தேர்வுகளை ஒத்தி வைக்க வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.