முனிச்,
முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், நேற்று முன்தினம் ஜெர்மனி சென்றார். இந்த மாநாட்டுக்கு இடையே அவர் பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்து பேசினார்.
அந்தவகையில் ஜெர்மன் வெளியுறவு மந்திரி அன்னலேனா பாயர்போக்கை நேற்று சந்தித்து பேசினார். அப்போது இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு நாட்டு மந்திரிகளும் பேசினர். அத்துடன் உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் உக்ரைன் போர் பதற்றம் மற்றும் ஆப்கன் விவகாரங்கள் குறித்தும் இரு மந்திரிகளும் விவாதித்தனர்.
இதைப்போல ஈரான் வெளியுறவு மந்திரி அமிராப்தோல்லையன், சுலோவேனிய வெளியுறவு மந்திரி ஆன்சி லோகர், சவுதி அரேபிய மந்திரி பைசல் பின் பர்கான் அல் சவுத், ஆஸ்திரிய மந்திரி அலெக்சாண்டர் ஸ்காலன்பெர்க் மற்றும் பல்வேறு நாடுகளின் வெளியுறவு மந்திரிகளை சந்தித்தார். முனிச் பாதுகாப்பு மாநாட்டை முடித்துக்கொண்டு ஜெய்சங்கர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரான்ஸ் செல்கிறார்.