இஸ்லாமாபாத்,
புலவாமா தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாத அமைப்புகள் மீது அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஜமாத்-உத்-தவா பயங்கரவாத அமைப்பு மற்றும் அதன் அறக்கட்டளையான பலா-இ-இன்சானியத் ஆகியவற்றுக்கு சொந்தமான மதரசாக்கள் (இறையியல் கல்லூரி) மற்றும் சொத்துகளை பாகிஸ்தான் அரசு பறிமுதல் செய்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் அரசியல் இயக்கமாக விளங்கி வரும் ஜமாத்-உத்-தவாவுக்கு சொந்தமாக 300 மதரசாக்கள், கல்லூரிகள், மருத்துவமனைகள் பாகிஸ்தானில் இயங்கி வருகிறது. சக்வால், அட்டோக் மாவட்டங்களில் உள்ள மதரசாக்களை அரசு அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், ஜமாத்-உத்-தவா அமைப்பின் சொத்துகளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே புலவாமா தாக்குதலுக்கு காரணமான ஜெய்ஷ்-இ-முகமது இயக்கம் பாகிஸ்தானில் இல்லை என அந்த நாட்டு ராணுவம் மறுத்துள்ளது.