ஒசாகா,
ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில், ஜி-20 உச்சி மாநாடு இன்று நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று முன்தினம் இரவு தனி விமானம் மூலம் ஒசாகா புறப்பட்டு சென்றார். அவருடன் தூதுக்குழுவினரும் சென்றுள்ளனர்.நேற்று அதிகாலை ஒசாகா கன்சாய் சர்வதேச விமான நிலையத்தில் சென்று இறங்கிய பிரதமர் மோடிக்கு அன்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, இன்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவும் உடன் இருந்தார்.
இந்த முத்தரப்பு சந்திப்பின் போது பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த சந்திப்பின் போது, தேர்தலில் 2-வது முறையாக வெற்றி பெற்ற பிரதமர் மோடிக்கு டொனால்டு டிரம்ப் வாழ்த்துக்களை தெரிவித்தார்.