டோக்கியோ,
44 வயதான யுசாகு மேசாவா ஜப்பானை சேர்ந்தவர். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய 17 கோடீஸ்வரர்களில் ஒருவர். இந்தியாவில் உள்ள பிளிப்கார்ட் போன்ற ''சோசோடவுன்'' என்ற ஆன்லைன் ரீடெய்ல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஜப்பானில் இதுதான் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் ஆகும். அதேபோல் பல்வேறு பவுண்டேஷன், கலை பொருள் சேமிப்பு மையம் ஆகியவற்றை நடத்தி வருகிறார் யுசாகு மேசாவா.
ஏற்கெனவே, யுசாகு மேசாவா ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் "பிக் பால்கான் ஹெவி'' ராக்கெட் மூலம் 2023-ம் ஆண்டு நிலவுக்கு செல்ல இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது யுசாகு மேசாவா, ரஷிய விண்வெளி வீரரான அலெக்சாண்டருடன் இணைந்து 12 நாள் சுற்றுலாவாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு நேற்று புறப்பட்டு சென்றார்.
அவர் தன்னுடைய இந்த விண்வெளி பயணத்தை படம்பிடிப்பதற்காக தனது உதவியாளர் ஒருவரையும் உடன் அழைத்து சென்றார். அவர்கள் 3 பேரும் விண்வெளிக்கு சோயூஸ் எம்20 ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்றுள்ளனர்.