வாஷிங்டன்,
உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைக்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. முதல் கட்டமாக சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் வயது முதிர்ந்தவர்களுக்கு தடுப்பூசி போட திட்டமிடப்பட்டது.
இந்நிலையில் அமெரிக்காவின் புதிய அதிபராக பதவியேற்க உள்ள ஜோ பைடன், அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள உள்ளதாக ஆட்சி மாற்றத்திற்காக அமைக்கப்பட்ட குழு தெரிவித்துள்ளது. மேலும் அமெரிக்க துணை அதிபராக உள்ள மைக் பென்ஸ், நாளை கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கொரோனா தடுப்பூசி மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் அதிகரிக்க செய்வதற்காகவே தடுப்பூசி போட்டுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.