வாஷிங்டன்,
அமெரிக்க அதிபருக்கான தேர்தல் கடந்த 3-ந் தேதி நடந்து முடிந்தது. இதன் பின்னர் வெளியான வாக்கு எண்ணிக்கை முடிவுகளில் குடியரசு கட்சிக்கும், ஜனநாயக கட்சிக்கும் பல்வேறு மாகாணங்களில் இழுபறி நீடித்து வந்தது. பென்சில்வேனியா, நிவேடா ஆகிய மாகாணங்களில் வெற்றி பெற்றதன் மூலம் ஜோ பைடன் 290 இடங்களை கைப்பற்றி அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதேபோன்று, அமெரிக்க வரலாற்றில் முதன் முறையாக, ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் என்ற தெற்காசியாவை சேர்ந்த இந்திய வம்சாவளியான பெண் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
அதிபர் தேர்தலில் ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் வெற்றி பெற்ற பின்னர் அதற்கான கொண்டாட்டங்களில் அக்கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஈஸ்ட் பைக் தெருவில் 10-வது அவென்யூவில், அதிபர் தேர்தலில் பைடன் வெற்றி பெற்றதற்காக நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திடீரென மர்ம நபர் ஒருவர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், 31 வயது நபர் படுகாயமடைந்து உள்ளார்.
இதுபற்றி போலீசார் கூறும்பொழுது, காயம்பட்ட நபர் ஹார்பர்வியூ மருத்துவ மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்து விட்டார் என கூறினர்.
சம்பவம் நடந்த பகுதியில் இருந்து கைத்துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டு உள்ளது. அது போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. எனினும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் யாரும் அடையாளம் காணப்படவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.