வாஷிங்டன்,
வடகொரியாவுடன் இணக்கமான சூழ்நிலை நிலவுவதால், வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த கூட்டு ராணுவ பயிற்சியை நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளதாக அமெரிக்கா மற்றும் தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, உலக நாடுகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், அணு ஆயுத சோதனைகளிலும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளிலும் வட கொரியா தீவிர ஆர்வம் காட்டி வந்தது. இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி பதவி ஏற்றது முதல், அவருக்கும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே கடுமையான வார்த்தை யுத்தம் நடந்து வந்தது. இந்த சூழ்நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் தென்கொரியாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி, தென் கொரியாவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தியது.
அதைத் தொடர்ந்து தென்கொரியாவின் முயற்சியால் வடகொரியா தலைவர் கிம் ஜாங் உன்-னை உச்சி மாநாட்டில் நேருக்கு நேர் சந்தித்து பேச தயார் என டிரம்ப் முன் வந்தார். பல அதிரடி திருப்பங்களுக்கும், மாற்றங்களுக்கும் பிறகு, இவ்விரு தலைவர்கள் சந்தித்து பேசும் உச்சி மாநாடு சிங்கப்பூர் சென்டோசா தீவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பில், அணு ஆயுத பரிசோதனைகளை முழுவதும் கைவிடுவது என வடகொரியா உறுதி அளித்துள்ளது. இதற்கு பதிலாக வடகொரியாவுக்கு மண்டல பாதுகாப்பு அளிப்பது என அமெரிக்காவும் உத்தரவாதம் அளித்திருந்தது.
ஏற்கனவே தென்கொரியாவும் அமெரிக்காவும் பல ஆண்டுகளாக கூட்டு ராணுவ பயிற்சியை மேற்கொண்டு வருகின்றன. இதற்கு வடகொரியா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இந்நிலையில், ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள தென்கொரியா-அமெரிக்கா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சி நிறுத்திவைக்கப்படுவதாக வெள்ளைமாளிகை அறிவித்துள்ளது.
இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில், தென்கொரியா படைகளுடன் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருந்த கூட்டு ராணுவ பயிற்சிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்படும் என வெள்ளைமாளிகையின் செய்திதொடர்பாளர் டாணா வொயிட் தெரிவித்தார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் மற்றும் வட கொரியாவின் தலைவர் கிம் ஜாங் உன்-னின் சிங்கப்பூரில் நடந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்புக்கு பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.