இஸ்லாமாபாத்,
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், அவரது மகள் மரியம் நவாஸ், மருமகன் கேப்டன் சப்தார், மகன்கள் ஹசன் நவாஸ், உசேன் நவாஸ் ஆகியோர் மீது 3 ஊழல் வழக்குகளை பதிவு செய்து தேசிய பொறுப்புடைமை கோர்ட்டு விசாரிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
அதன்படி, லண்டன் அவென்பீல்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், அல் அஜிசியா உருக்காலை, ஹில் மெட்டல் எஸ்டாபிளிஸ்மென்ட் ஆகியவற்றில் நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் செய்த முதலீடுகள் தொடர்பாக இஸ்லாமாபாத்தில் உள்ள தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் 3 வழக்குகள் தாக்கலாகின.
இவற்றில் அவென்பீல்டு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் வாங்கிக்குவித்த வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள், மகள் மரியத்துக்கு 7 ஆண்டுகள், மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர்கள் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.
இந்த நிலையில் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது குடும்பத்தாரை தண்டித்த நீதிபதி முகமது பஷீர், இஸ்லாமாபாத் தேசிய பொறுப்புடைமை கோர்ட்டில் நிலுவையில் உள்ள எஞ்சிய 2 ஊழல் வழக்கு விசாரணையில் இருந்து திடீரென விலகி உள்ளார்.
இது தொடர்பாக அவர் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அன்வர்கான் காசிக்கு கடிதம் எழுதி உள்ளார்.
நவாஸ் ஷெரீப் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை தான் விசாரிக்க முடியாது என்று கூறி இருப்பதுடன், அதை வேறு நீதிபதிக்கு மாற்றினால் ஆட்சேபிக்கவில்லை என தெரிவித்து உள்ளார்.
நவாஸ் ஷெரீப் மீதான எஞ்சிய 2 வழக்குகளை நீதிபதி முகமது பஷீர் விசாரிக்க, அவரது வக்கீல் ஏற்கனவே எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.