உலக செய்திகள்

காபூல் தாக்குதல்:பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும் -இந்தியா வலியுறுத்தல்

காபூல் தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவையை அதிகரிக்கின்றன என இந்தியா ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் வலியுறுத்தி உள்ளது.

தினத்தந்தி

காபூல்

ஆப்கானிஸ்தானில் கடந்த மே மாத இறுதியில் இருந்து அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற தொடங்கின. அதனைத் தொடர்ந்து கடந்த 15-ந் தேதி ஆப்கானிஸ்தான் முழுவதுமாக தலீபான்கள் வசம் சென்றது.

இதையடுத்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் ஆப்கானிஸ்தானில் சிக்கியிருக்கும் தங்கள் நாட்டு குடிமக்களை விமானங்கள் மூலமாக பாதுகாப்பாக வெளியேற்றும் பணியில் இறங்கின.

இதற்கிடையில் தலீபான்களுக்கு பயந்து ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் மக்கள் அண்டை நாடுகளுக்கு தப்பி செல்ல முயற்சித்து வருகின்றனர்.

நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் காபூல் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கின்றனர்.

தலீபான்கள் காபூல் நகரத்தைக் கைப்பற்றிய பிறகு, விமான நிலையம் மட்டும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த சுமார் 5,800 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த ஆயிரம் வீரர்களும் விமான நிலையப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காபூல் நகரம் தலீபான்களின் வசமான பிறகு 10 நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேர் விமானங்கள் மூலமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

காபூல் விமான நிலையத்துக்கு வெளியே காத்திருக்கும் மக்களுக்கு அமெரிக்கா,இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் ஏற்கனவே தாக்குதல் நடத்தப்படலாம் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று காபூல் விமான நிலையத்துக்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு சக்திவாய்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தன.ஒன்று விமான நிலையத்தின் அபே வாயில் அருகிலும், மற்றொன்று அந்த வாயில் பக்கத்தில் அமைந்துள்ள பாரன் ஓட்டல் அருகேயும் நடந்தன.

இந்த தாக்குதலில் பலி எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது வரை 103 பேர் உய்ரி இழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள் 90 பேர் அமெரிக்க ராணுவ வீரர்கள் 13 பேர் ஆவார்கள்.

தாக்குதல் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் காபூல் தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டிய தேவையை அதிகரிக்கின்றன என இந்தியா வலியுறுத்தி உள்ளது.

ஐ.நாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி மற்றும் பாதுகாப்பு கவுன்சிலின் தலைவர் டி.எஸ் திருமூர்த்தி இதுகுறித்து பேசும் போது

ஆப்கானிஸ்தான் காபூல் வெடிகுண்டு தாக்குதலை இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த தாக்குதல்கள் பயங்கரவாதத்திற்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு புகலிடங்களை வழங்கும் அனைவருக்கும் எதிராகவும் உலக நாடுகள் ஒன்றிணைந்து நிற்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

காபூலில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு எங்கள் இதயப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று கூறினார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது