நூர்சுல்தான்,
கஜகஸ்தான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள அல்மாட்டி நகரில் இருந்து தலைநகர் நூர்சுல்தானுக்கு நேற்று காலை பெக் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான போக்கர் 100 ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 95 பயணிகளும், 3 விமான ஊழியர்களும் இருந்தனர்.
விமானம் ஓடுபாதையில் இருந்து பறக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே திடீரென விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் விமானம் தரையை நோக்கி மிகவும் தாழ்வாக பறந்தது.
இதையடுத்து விமானி உடனடியாக விமானத்தை அவசரமாக தரையிறக்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை.
அதனைத் தொடர்ந்து, விமான நிலையத்தின் தடுப்புச் சுவரை உடைத்துக்கொண்டு பாய்ந்த விமானம், விமான நிலையத்தையொட்டி அமைந்துள்ள 2 மாடி கட்டிடத்தின் மீது பயங்கரமாக மோதியது.
இதில் விமானம் 2 துண்டானது. விமானத்தின் பெரும் பகுதி பாகங்கள் நொறுங்கின. விபத்து குறித்து தெரியவந்ததும் மீட்பு குழுவினர், தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீவிர மீட்பு பணியில் இறங்கினர்.
எனினும் 9 பேரை பிணமாகத்தான் மீட்கமுடிந்தது. அவர்களில் விமானியும் ஒருவர். 3 பச்சிளம் குழந்தைகள் மற்றும் சிறுவர்கள் உள்பட 66 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.
அவர்கள் அனைவரும் ஆம்புலன்சுகள் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 6 பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.
இதனால் விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்தது. மேலும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இதுகுறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தை தொடர்ந்து, அல்மாட்டி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் பெக் ஏர் விமான நிறுவனமும் தனது சேவையை ரத்து செய்தது.
இதற்கிடையே விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள அந்த நாட்டின் அதிபர் குவாசிம் ஜோமர்ட் தொக்கேவ், விபத்துக்கு காரணமானவர்கள் சட்டத்தின்படி கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார்.