ஒட்டாவா,
கனடா நாட்டின் எட்மண்டன் நகரில் வசிக்கும் கேரள பெண்ணான சினேகா ஜாய், தனது செல்போனில் உள்ள லாட்டரி செயலியை வழக்கம் போல் சரிபார்த்த போது, அவரது வாழ்க்கையையே மாற்றும் அதிர்ஷ்ட தருணம் அமைந்துள்ளது. அங்கு நடைபெறும் 'லோட்டோ 6/49' லாட்டரி குலுக்கலில் அவருக்கு 5 மில்லியன் கனடிய டாலர் இந்திய மதிப்பில் ரூ.30 கோடிக்கு மேல் பரிசு விழுந்துள்ளது.
கடந்த அக்டோபர் 21-ந்தேதி நடைபெற்ற குலுக்கலை தொடர்ந்து, 'லோட்டோ ஸ்பாட்' செயலியில் தனது லாட்டரி சீட்டை சரிபார்த்த போது இந்த ஜாக்பாட் அடித்திருப்பதை சினேகா ஜாய் கண்டறிந்தார். கிளாசிக் ஜாக்பாட் பிரிவில் 6 எண்களும் சரியாக பொருந்தியதால், அவர் ஒரே நொடியில் கோடீஸ்வரியானார்.
பரிசு தொகையை பெற சென்றபோது, தனது எதிர்பாராத வெற்றி குறித்து பேசிய அவர் கூறியதாவது:-
"பரிசு விழுந்ததை அறிந்ததும் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. அந்த நேரத்தில் ஏற்பட்ட உணர்வுகளை 'அதிர்ச்சி, மகிழ்ச்சி, நிம்மதி' ஆகிய 3 வார்த்தைகளில் விவரிக்கலாம். லோட்டோ 6/49 லாட்டரி வாங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாலும், இவ்வளவு பெரிய தொகை எனக்கு கிடைக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை."
தற்போது வங்கி கணக்கில் 5 மில்லியன் டாலர் உள்ள நிலையில், தனது வீட்டு கடனை முழுமையாக அடைத்து பெரிய நிதிச்சுமையிலிருந்து விடுபடுவதே சினேகா ஜாயின் முதல் முன்னுரிமையாக உள்ளது. அதனை தொடர்ந்து, உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவும், பரிசு தொகையை தனது குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ளவும் அவர் திட்டமிட்டுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.