ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஓர் இளம் கோடீசுவரர், நல்ல சம்பளத்தில் தன்னுடன் உலகம் சுற்ற ஊழியர் வேண்டும் என்று விளம்பரம் கொடுத்திருக்கிறார்.
மேத்யூ லெப்ரே என்ற அந்த கோடீசுவரருக்கு 26 வயது. தனது ஈ காமர்ஸ் மற்றும் வர்த்தகப் பயிற்சி நிறுவனங்களை விரிவுபடுத்துவதற்காக உலகம் முழுக்கச் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இவர் திட்டமிட்டிருக்கிறார்.
சிட்னியைச் சேர்ந்த இவர், கடந்த ஆண்டு ஜப்பான், துபாய், ஹவாய் ஆகியவற்றில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அத்துடன், பல்வேறு நிறுவனங்களில் வணிக விரிவுரையையும் இவர் மேற்கொண்டு வருகிறார்.
தனது வேலையை உலகம் முழுக்கக் கவனித்துக்கொள்ள ஒரு தனி ஊழியர் தேவை என்று மேத்யூ விளம்பரம் கொடுத்துள்ளார். அந்த ஊழியருக்கு மாதம் 52 ஆயிரம் டாலர்கள் வரை சம்பளம் வழங்கப்படும் என்றும், தன்னுடன் உலகம் முழுக்கப் பயணம் செய்ய வேண்டியிருக்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.
சம்பளம் ஒருவரின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது என்றும், பெண்கள் என்றால் அவர்களுக்கு தனியாக தங்கும் விடுதியும், உடல்நலக் காப்பீடும் எடுத்துக்கொடுக்கப்படும் என்றும் மேத்யூ தெரிவித்திருக்கிறார். இந்த விளம்பரம் பலரை ஆச்சரியப்படுத்தி இருக்கிறது, விண்ணப்பிக்கலாமா என்று யோசிக்கவும் வைத்திருக்கிறது.