சியோல்,
வடகொரியா கடந்த ஓராண்டாக அணு ஆயுத ஏவுகணை, அணுகுண்டு சோதனை நடத்துவதில் மிகவும் தீவிரம் காட்டி வருகிறது. குறிப்பாக அந்நாட்டின் வடக்கு ஹம்ங்யோங் மாகாணத்தில் உள்ள பங்க்கியேரி என்னும் பிராந்தியத்தை சோதனைக்களமாக பயன்படுத்தி தொடர்ந்து அணுகுண்டு சோதனைகள் நடத்தப்பட்டு வந்தன.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக பங்க்கியேரி பகுதியில் கடும் நிலச்சரிவும், நிலநடுக்கமும் ஏற்பட்டது. குறிப்பாக கடந்த வெள்ளிக்கிழமை இங்கு பதிவான நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 2.7 ஆக இருந்தது. இந்த நிலநடுக்கம் பூமிக்கு 5 கிலோ மீட்டர் அடியில் ஏற்பட்டு இருந்தது.
இது சிறிய அளவிலான நிலநடுக்கம்தான் என்றாலும் கூட கடந்த மாதம் 3ந் தேதி அன்று வடகொரியா நடத்திய ஹைட்ரஜன் குண்டு சோதனையின்போது ஏற்பட்ட பூமி அதிர்ச்சி ரிக்டர் அளவுகோளில் 6.7 ஆக பதிவாகி இருந்தது. தொடர்ந்து 6 அணுகுண்டு சோதனைகள், நிலச்சரிவு, நிலநடுக்கம் ஆகியவற்றால் பங்க்கியேரி பகுதியில் அணு ஆயுத சோதனைகளை நடத்த முடியாத அளவிற்கு வடகொரிய தள்ளப்பட்டு உள்ளது. மீறி நடத்தினால் அது பங்க்கியேரி பிராந்தியத்துக்கு பெரும் பாதிப்பாக அமையும் என்று தென்கொரிய புவியியல் ஆய்வு நிபுணர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.