லண்டன்,
கொரோனா வைரஸ் நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடல் செலுத்தி ஆய்வு செய்து வரும் நிலையில் இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது.
பைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்த இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என பிரிட்டன் அரசு அறிவித்திருந்தது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை பிரிட்டன் ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.
இந்த நிலையில் பிரிட்டனில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தற்போது துவங்கியுள்ளது. 90 வயதான மார்கரெட் கீனன் என்பவருக்கு முதலில் தடுப்பூசி செலுத்தப்பட்டது. வழக்கமாக தடுப்பூசி ஒன்று உற்பத்தி செய்ய உத்தேசிக்கப்பட்டு, ஆராய்ச்சி நிலையில் இருந்து பயன்பாட்டுக்கு வர 10 ஆண்டுகள் வரை ஆகும். ஆனால் பைசர் மற்றும் பயோஎன்டெக் தயாரித்துள்ள இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி வெறும் பத்தே மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.