வாஷிங்டன்,
லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் கடந்த 2005ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ந்தேதி நடந்த பயங்கர குண்டுவெடிப்பில் அப்போதைய பிரதமர் ரபீக் ஹரிரி உள்பட 22 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பை சேர்ந்த சலீம் அய்யாஷ் மற்றும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கடந்த 2015ம் ஆண்டு முதல் சர்வதேச கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சர்வதேச கோர்ட்டு சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்தது. அதேசமயம் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் சலீம் அய்யாசை குற்றவாளியாக அறிவித்த சர்வதேச கோர்ட்டின் தீர்ப்பை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
லெபனான் பிரதமர் ரபீக் ஹரிரி படுகொலை செய்யப்பட்டதில் ஹிஸ்புல்லா செயல்பாட்டாளர் சலீம் அய்யாசுவுக்கு எதிராக சர்வதேச கோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமெரிக்கா வரவேற்கிறது.
இந்த தீர்ப்பு ஹிஸ்புல்லாவும் அதன் உறுப்பினர்களும் லெபனானின் பாதுகாவலர்கள் அல்ல என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது. ஹிஸ்புல்லா, ஈரானின் மோசமான திட்டங்களை முன்னெடுப்பதற்கான அர்ப்பணிக்கப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.