கேரகாஸ்,
வெனிசுலா நாடு அதிக எண்ணெய் வளம் நிறைந்தது. இங்கு எண்ணெய் உற்பத்தியால் அதன் பொருளாதாரம் உயர்ந்து இருந்தது. அதிபர் பதவியில் இருந்த ஹியுகோ சாவேஸ் கடந்த 2013ம் ஆண்டு மறைந்த பின்னர் அவரது அரசியல் வாரிசான நிகோலஸ் மெஜுரோ (வயது 55) அதிபராக பொறுப்பேற்று கொண்டார்.
அதனை தொடர்ந்து அந்நாட்டில் உணவு, மருந்து பற்றாக்குறை ஏற்பட்டது. இதே போன்று குற்றங்களின் எண்ணிக்கை உயர்ந்தது. தொடர்ந்து அரசின் கட்டுக்குள் இருந்த நீர், மின்சாரம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளின் நடவடிக்கைகளும் போதிய அளவில் இல்லை. இதனால் அங்கு அமைதியற்ற சூழ்நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், சமீபத்தில் மே மாதத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று 2வது முறையாக நிகோலஸ் அதிபரானார்.
இவர் முன்னாள் பேருந்து ஓட்டுநர் மற்றும் யூனியன் தலைவராக இருந்தவர். அதன்பின் அரசியலில் நுழைந்து அந்நாட்டின் அதிபர் ஹியுகோ தலைமையிலான அமைச்சரவையில் வெளிவிவகார துறை மந்திரியாக இருந்துள்ளார். வெனிசுலா நாட்டின் குடியரசு துணை தலைவராகவும் இருந்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக பொருளாதார நெருக்கடியில் சிக்கி அந்நாடு தவித்து வருகிறது. இந்நிலையில், நேற்று மாலை ராணுவ நிகழ்ச்சி ஒன்றில் நிகோலஸ் கலந்து கொண்டார். அவர் பேசி கொண்டிருந்தபொழுது, வெடிமருந்துகள் நிரப்பப்பட்ட ராக்கெட்டுகள் வெடிக்க செய்யப்பட்டன.
இதனை அடுத்து நிகோலஸ் உடனடியாக தனது பேச்சினை நிறுத்தினார். இந்த தாக்குதலில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி அவர் கூறும்பொழுது, கொலை முயற்சி ஒன்றில் இருந்து தப்பினேன். அதற்காக கடவுளுக்கு, நாட்டு மக்களுக்கு மற்றும் ஆயுத படையினருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கொலம்பியா மற்றும் அமெரிக்காவினர் என்னை கொல்ல திட்டமிட்டு சதி செய்து உள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.