கோலாலம்பூர்,
ஆயுத குவிப்பில் ஈடுபட்டு வரும் வடகொரியாவுக்கு தூதரக ரீதியாக அளிக்கப்படும் அழுத்தத்தை அதிகரிக்கும் வகையில், மலேசிய குடிமக்கள் வடகொரியா பயணம் மேற்கொள்வதற்கு மலேசிய அரசு தடை விதித்து உத்தரவிட்டது. மேற்கொண்டு அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த இந்த உத்தரவு நீடிக்கும் என்று மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலேசிய அரசின் இந்த தடையுத்தரவு, வரும் அக்டோபர் 5 ஆம் தேதி போயாங்யாங் நகரில் நடைபெறும் வடகொரியா - மலேசியா இடையேயான கால்பந்து போட்டிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிகிறது. ஏறகனவே, இருநாடுகளுக்கும் இடையேயான கால்பந்து போட்டி இரு முறை பாதுகாப்பு காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டு இருந்தது.
தடையுத்தரவை மீறி மலேசிய கால்பந்து அணி வடகொரியா செல்லுமா? என்பது குறித்து சிறிது நேரத்தில் அறிக்கை வெளியிடப்படும் என்று மலேசிய கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
உலக நாடுகளின் எதிர்ப்பு ஐநா பொருளாதார தடைகளை மீறி வடகொரியா அணு ஆயுத சோதனை நடத்தி வருகிறது.இதனால், குவைத், மெக்ஸிகோ ஆகிய நாடுகள் தங்கள் தூதரை திரும்ப அழைத்துள்ளன. வடகொரியாவுடன் தூதரக உதரவுகள் கொண்டிருக்கும் ஒரு சில நாடுகளில் மலேசியாவும் அடங்கும். முன்னதாக இரு நாடுகளும் தங்கள் நாட்டு குடிமக்கள் பயணம் செய்வதற்கு தடை விதித்து இருந்தது. கடந்த மார்ச் மாதம் இருநாடுகளுக்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டதையடுத்து பயணம் செய்ய விதிக்கப்பட்ட தடை விலக்கிகொள்ளப்பட்டு இருந்தது.